உலகம்  தாங்காது

கூட்டுச்சேரா நாடான ஆப்கானிஸ்தானை முன்னாள் சோவியத் யூனியன், 1979 டிசம்பரில் ஆக்கிரமித்ததால் துவங்கியதுதான்

கூட்டுச்சேரா நாடான ஆப்கானிஸ்தானை முன்னாள் சோவியத் யூனியன், 1979 டிசம்பரில் ஆக்கிரமித்ததால் துவங்கியதுதான் இரண்டாம் பனிப்போர். பத்தாண்டு பனிப்போரின் விளைவாக சோவியத்யூனியன் பலவீனப்பட்டு சிதறுண்டது. தற்போது அண்டை நாடான உக்ரைனுக்குச் சொந்தமான கிரிமியாவை - பல்வேறு நிர்ப்பந்தங்களால் - ரஷ்யா தலையிட்டு தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது, மூன்றாம் பனிப்போரை துவக்கி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யர்களை பெரும்மான்மையாகக் கொண்ட கிரிமிய மக்கள், தங்கள் தனித்தன்மையையும், கலாச்சாரத்தையையும் உக்ரேனியர்களிடமிருந்து பாதுகாக்க தன்னாட்சியில் இருக்கும் தங்கள் பகுதியை சுதந்திரப் பகுதியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் தங்கள் தேசமக்கள் மற்றும் தேசநலனைப் பாதுகாக்க பிறநாடுகளின் விவகாரங்களில் தலையிடலாம் என்ற கொள்கையுடையவர்கள்.

இதனடிப்படையில் ரஷ்ய அதிபர் புட்டின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தன் பாராளுமன்றத்தின் அனுமதிபெற்று பெரும்பான்மை ரஷ்ய இனத்தவர்கள் வாழும் கிரிமியாவை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது மேற்கு நாடுகளில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. கிரிமியாவிலுள்ள பெரும்பான்மை ரஷ்யர்களின் கலாச்சார உரிமைகளை பாதுகாப்பதோடு கிரிமியாவில் முதலீடு செய்துள்ள ரஷ்ய நிறுவனங்களை பாதுகாப்பதும், கிரிமியாவில் உள்ள தன் கடற்படைத்தளங்களை உக்ரைன் மற்றும் நேட்டோகட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் பாதுகாப்பதும் புட்டினின் பிராதான நோக்கம். 

இந்நிலையில் கிரிமியாவின் சுதந்திரத்திற்கான கருத்துக்கணிப்பை மார்ச் 20இல் நடத்தயிருப்பதாக கிரிமிய பிரதமர் அறிவித்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒன்றுப்பட்ட உக்ரைன்தான் என்கின்றன மேற்குநாடுகளும், உக்ரைனும். மக்களின் சுயநிர்ணய உரிமை என்கின்றன ரஷ்ய மற்றும் கிரிமிய அரசுகள். ரஷ்யாவின் இம்முடிவை மேற்குநாடுகள் வன்மையாக கண்டித்து பொருளாதாரத்தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டுகின்றன.

இப்பரபரப்பான சூழ்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா சோதித்திருப்பதும், துருக்கியில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படையின் கு16 விமானங்கள் கிரிமியா பகுதியில் பறப்பதும் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளன. 

எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்கு நாடுகளின் தலைவர்களும், ஊடகங்களும் புட்டினை சைத்தானாகவும், சர்வாதிகாரியாகவும், பேராசையுடைய ஊழல் மன்னனாகவும், விரிவாக்கக்கொள்கையுடைய நவீன செங்கிஸ்கானாகவும் சித்தரிக்கின்றன.  ஜெர்மன் அதிபர் புட்டினை புத்திசுகமில்லாதவர் என்கிறார்.

செனட்டர் மெக்கெய்ன் புட்டினின் கண்களில் முபுடீ என்ற மூன்றெழுத்தைதான் காண்கின்றேன் என்று சொல்லி புட்டின் பனிப்போரின் போது கிழக்கு ஜெர்மனியில் முபுடீ-யில் பணியாற்றியதை நினைவுபடுத்தி புட்டினை ஒரு போர்வெறியராக சித்தரிக்கின்றனர். புட்டினை சிறுமைப்படுத்தி, தனிமைப்படுத்தி, ஆத்திரமூட்டி, தவறுசெய்யவைத்து பலவீனப்படுத்தி ரஷ்யாவை நிலைகுலைய வைப்பதுதான் மேற்கத்திய நாடுகளின் நோக்கமாக இருக்கிறது. 

புட்டினின் ராணுவ நடவடிக்கைக்கு பெரும்பாலான ரஷ்யமக்கள் ஆதரவு தெரிவித்தாலும் பல எதிர்ப்புகளும் உருவாகியுள்ளன. குறிப்பாக புட்டினின் உக்ரைன் தலையீட்டை ஹிட்லர் 1938இல் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்ததோடு ஒப்பிட்டு மாஸ்கோ டைம்ஸ் பத்திரிகையில் எழுதின வரலாற்று பேராசிரியர் ஆன்டிரி சுப்போ உடனடியாக வேலைநீக்கம் செய்யப்பட்டது புட்டினின் சகிப்பின்மையை காட்டுகிறது.

ரஷ்யாவின் பலமாக விளங்குபவை நான்கு: மக்கள் சக்தி, எரிசக்தி, ராணுவசக்தி மற்றும் நிலசக்தி. இதில், முதல் மூன்றின் வலிமை நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளை தனியாக எதிர்க்கும் சக்தி தற்போதய ரஷ்யாவிற்கு இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும், தன் தேச நலனையும், தேச கெüரவத்தையும், மற்றும் தன் தேசிய இனத்தின் நலனையும் பாதுகாக்கும் நிர்ப்பந்தம் புட்னிக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு நாடுகளின் நிர்பந்தங்களால் ஆத்திரம் அடைந்த புட்டின் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டாலும் தன்தேச பாதுகாப்புக்கு முக்கியமான கிரிமியா பகுதியை விட்டுக்கொடுப்பாரா அல்லது துணிவோடு மேற்கு நாடுகளின் எதிர்ப்பை சமாளிப்பாரா என்பதற்கு காலம்தான் விடை கொடுக்க வேண்டும்.

தற்போது ரஷ்யாவிற்கு, அந்நாட்டிற்கு வெளியே சிரியாநாட்டில் மட்டும்தான் ஒரு கடற்படை தளம் உள்ளது.  பிப்ரவரி 24, 2014இல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடற்படை தளங்களை மீண்டும் ரஷ்யா அமைக்க திட்டமிட்டிருப்பதாக ரஷ்ய தளபதி செர்ஜிய் ஷோஹிகு அறிவித்துள்ளது புதிய பனிப்போரை ரஷ்யா துவங்க தயாராக உள்ளதை காட்டுகிறது. 

சிரியநாட்டு பிரச்சினையின்போது உலக தலைவர்கள் விவேகத்தோடு செயல்பட்டு போரை தடுத்ததுபோல கிரிமிய பிரச்சினையிலும் ராஜதந்திரத்தோடு நடந்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது காலத்தின் கட்டாயம்.  காரணம், மூன்றாம் பனிப்போரையோ, உலகப்போரையோ உலகம் தாங்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com